திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. உற்சவர் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், பெரிய தேரில் ஜம்புகேஸ்வரரும், மற்றொரு தேரில் அகிலாண்டேஸ்வரி அம்மனும் எழுந்தருளினர்.
பின்னர், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், தேரோட்டத்தின் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.