சித்தோடு அருகே டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து திருப்பூரில் உள்ள டையிங் கம்பெனிக்கு சாயக்கழிவு நீரை சுத்தப்படுவதற்காக டேங்கர் லாரியில் அலுமினியம் குளோரைடு கொண்டு வரப்பட்டது. தனியார் நிறுவனத்தில் அமிலத்தை இறக்கிய பிறகு டேங்கர் லாரியை சுத்தப்படுத்த சித்தோடு பகுதியில் உள்ள தனியார் சர்வீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
அப்போது, டேங்கர் லாரியை சுத்தப்படுத்தும் பணியில் யுகானந்தன், சந்திரன், செல்லப்பன் ஆகியோர் ஈடுபட்டனர். டேங்கரை சுத்தம் செய்ய இறங்கியபோது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி 3 பேரும் மயக்கமடைந்தனர். அங்கிருந்தவர்கள் 3 பேரையும் உடனடியாக மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் யுகானந்தன், சந்திரன் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட செல்லப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.