மியான்மரில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் அடுத்தடுத்த இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வானுயர கட்டடங்கள் சீட்டுக்கட்டுக்களை போல சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரையில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலே அருகே 3-வது முறையாக 5.1 ரிக்டர் எனும் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தெருக்களில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதேபோல தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை 5.48 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை .