அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டிரம்பின் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அமெரிக்கா மீது ஏவுகணை வீச தயாராக உள்ளதாக ஈரான் வீடியோ வெளியிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்க புதிய ஒப்பந்தம் கொண்டுவர முயற்சி மேற்கொண்ட அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அணு ஆயுத உற்பத்திக்கு தடைவிதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் இதற்கு முன்பு பார்த்திடாத வகையில் தாக்குதல் நடத்தப்படும் என்றும், ஈரான் மீது 2வது கட்ட வரி விதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் எனவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா மீது ஏவுகணைகளை வீச தயாராக உள்ளதாக தெரிவித்து ஈரான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பூமிக்கு அடியில் புதிய ஏவுகணை தளத்தை உருவாக்கி அதில், வாகனங்களில் ஏவுகணைகள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது போன்று இடம்பெற்றுள்ளது.
மேலும், புதிய ஏவுகணை தளத்தில் துல்லியமாக வழிகாட்டும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உலக நாடுகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.