A.I வளர்ச்சி, பெரும்பாலான வேலைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவால் ஈடுசெய்ய முடியாத மூன்று பாதுகாப்பான தொழில்களைப் பட்டியலிட்டுள்ளார். மனித உழைப்பும், புத்திசாலித்தனமும் தேவைப்படும் அந்த மூன்று தொழில்கள் என்னென்ன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2022 ஆம் ஆண்டில் OpenAI தனது முதல் AI மாடலான ChatGPT ஐ அறிமுகப்படுத்தியது. அன்று முதல், ஒவ்வொரு நாளும், AI தொழில்நுட்பத் துறை, வேகமாக வளர்ந்து வருகிறது. AI வளர்ச்சி, பெரும்பாலான வேலைகளை அழித்துவிடும் என்ற அச்சம் இருந்தபோதிலும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்று கூறப்பட்டு வந்தது.
ஆனாலும், பல்வேறு துறைகளில் AI வேகமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டுக்குள், பல்வேறு துறைகளில் உள்ள மொத்த வேலைகளில் 30 சதவீதம் Automation ஆகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 75 சதவீத நிறுவனங்கள் தங்கள் வணிகத்தில் AI பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) இந்த மாதத்துக்குள் 2,000 வேலைகளைக் குறைக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோர்கன் ஸ்டான்லி மட்டுமின்றி, மற்ற வங்கிகளும் வேலைக் குறைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. உதாரணமாக, கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), 5 சதவீதம் வரை பணியாளர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபலமான லேட் நைட் டாக் ஷோவான Jimmy Fallon நடத்தும் The Tonight Showவில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கலந்து கொண்டார். அதில் பேசிய பில் கேட்ஸ், AI நிச்சயமாக உலகை ஆட்சி செய்யும் என்றும், பெரும்பாலான துறைகளில், பெரும்பாலான பணிகளுக்கு, இனி மனிதர்கள் தேவைப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஒரு சிறந்த மருத்துவர், ஒரு சிறந்த ஆசிரியர் போன்ற சில பணிகள், AI ஆல் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள பில் கேட்ஸ், Coding எழுதும் குறியீட்டாளர்கள், biologists மற்றும் எரிசக்தி வல்லுநர்களாகிய energy professionals ஆகிய மூன்று தொழில்களை இப்போதைக்கு AI யால் மாற்றுவது கடினம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவால் கணினி குறியீட்டை உருவாக்க முடியும் என்றாலும், சிக்கலான மென்பொருள் மேம்பாட்டுக்குத் தேவையான துல்லியம், மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்கள் அதற்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட சிக்கலை மிகத் திறமையாகத் தீர்ப்பதற்கு AI-யால் முடியாது. எனவே, Coding எழுதும் software developer வேலைக்கு AI அச்சுறுத்தல் இல்லை என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
AI-யால், தரவுத்தொகுப்புகளை வைத்துக் கொண்டு, நோய் கண்டறிதலில் உதவ முடியுமே ஒழிய, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் உள்ளுணர்வை உருவாக்க முடியாது. எனவே, biologists-க்கு AI ஒரு மாற்றாக முடியாது என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக, எரிசக்தித் துறையில், எண்ணெய் மற்றும் அணுசக்தி முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகள் வரை,தொடர் சவால்களை எதிர்கொண்டு வல்லுநர்கள் பலவழிகளில் பணியாற்றி வருகிறார்கள். நெருக்கடி மேலாண்மை மற்றும் நீண்டகால எரிசக்தி திட்டமிடலில் இப்போதைக்கு, எரிசக்தி வல்லுநர்களுக்கு மாற்றாக AI வர வாய்ப்பில்லை என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸின் செய்தி மிக முக்கியமானதாகும். AI யுகத்தில், மனித நுண்ணறிவு மற்றும் அனுபவத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. AI வெறும் ஒரு கருவியாக இல்லாமல், ஒரு போட்டியாளராக இருக்கப் போகிறது. ஆகவே, AI காலத்தில் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்வது ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது.