கோவை அருகே அதிமுக, திமுக இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாளையத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ள பாபு என்பவர் பங்கேற்ற நிலையில், அவரிடம் பூத் கமிட்டி கூட்டத்தில் என்ன பேசினீர்கள் என திமுக நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.
அதற்கு பாபு பதில் அளிக்காததால், அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், இருதரப்பு மோதல் தொடர்பாக இரு கட்சிகளைச் சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.