மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம் என்று அஜ்மீர் தர்கா ஷெரீப் அறக்கட்டளை தலைவர் ஹாஜி சையத் சல்மான் சிஸ்டி தெரிவித்துள்ளார்.
வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிப்பதற்கான திருத்தங்களைச் செய்து, வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், மசோதாவுக்கு அஜ்மீர் தர்கா ஷெரீப் அறக்கட்டளை தலைவரும், சிஸ்டி பவுண்டேசன் தலைவருமான ஹாஜி சையத் சல்மான் சிஸ்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், வக்பு வாரிய திருத்த மசோதா, வக்பு நிர்வாகத்தில் நீண்ட காலமாக நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இருப்பதாகப் பாராட்டினார்.
இதன் மூலம், வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கங்கள் நிறைவேறும் வகையில் நாம் பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டார். வக்பு வாரியம் தற்போது தவறான நிர்வாகம், வெளிப்படையற்ற தன்மையால் முடங்கியுள்ளதாகவும், வக்பு வாரிய சீர்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார்.