தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சுங்கச்சாவடிகளை நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 78 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் அமலில் உள்ளது.
அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி, சுங்கச்சாவடிகளில் சுமார் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 46 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.