மதுரையில் ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுபாஷ் சந்திரபோஸை, என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
மதுரையில் காளீஸ்வரன் என்ற ரவுடி கிளாமர் காளி, கடந்த வாரம் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஒரு பெண் உட்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சிந்தாமணி பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அப்போது, ரவுடி சுபாஷ் சந்திரபோஸ், காவலர் இருவரை அரிவாளால் வெட்டியதுடன், துப்பாக்கியால் மற்றவர்களையும் சுட முயன்றதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் தற்காப்பு நடவடிக்கையாக காவல் ஆய்வாளர் பூமிநாதன் சுட்டதில், ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 2 காவலர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.