ரயில்வே துறை மேற்கொண்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என உயர்நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகம், கேரளாவில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க கோரி மனோஜ் இம்மானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் வழக்கறிஞர் ராம்குமார் ஆஜராகி, யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்களை கண்டறிந்து,
அதில், 9 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைத்து யானைகள் கடக்க வழி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதே போல் போத்தனூர், மதுக்கரை பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் சென்சார் கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரத்திலும் 2 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த நவீன கேமராக்கள், யானைகள் ரயில் தண்டவாளங்களில் வந்தால், அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளருக்கும், ரயில் ஓட்டுனருக்கும் தகவல்களை அனுப்பும் வகையில் செயல்படும் என்று விளக்கினார்.
இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளால், யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பது வெகுவாக குறைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், பாலக்காடு, போத்தனூர் ரயில் வழித்தடங்களில், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.