இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் விளங்குவதாக அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முகமது யூனுஸ் சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன என்றும், அவை வங்கக்கடலை அணுகுவதற்கு வழியே இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலனாக வங்கதேசம் உள்ளது என்றும், வங்கதேசத்தில் சீனா அதிக முதலீடுகளைச் செய்து உற்பத்தியை அதிகரித்தால் தமது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் எனவும் கூறியுள்ளார்.
வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பேச்சுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் கடன் வலையில், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் ஏற்கனவே சிக்கியுள்ளதாகவும், தற்போது வங்கதேசமும் சிக்கியிருப்பது யூனுசின் பேச்சு மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் சீனாவின் குரலாக யூனுசின் குரல் உள்ளது என்றும், இந்தியாவின் எந்த ஒரு நிலப்பரப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட விடமாட்டோம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், தகுந்த நேரத்தில் யூனுசின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.