சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட புலவன் பட்டி கிராமத்தில் சாலை அமைப்பதற்கு முன்பாகவே, முதலமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் படத்துடன் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட புலவன்பட்டி கிராமத்தில், காமராஜர் திடல் அருகே இருந்து வாட்டர் டேங்க் வரை 400 மீட்டர் தூரத்திற்குச் சாலை அமைக்க, 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வரை சாலை அமைக்கப்படாத நிலையில், சாலை அமைத்து தந்த முதல்வர் ஸ்டாலின், பரிந்துரை செய்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அம்பை ஒன்றிய தலைவர் பரணி சேகர் மற்றும் வார்டு உறுப்பினர் உள்ளிட்டவருக்கு நன்றி என அச்சிட்டு, தென்பொதிகை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் நிர்வாகம் சார்பாக நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
இதனால் சர்ச்சை எழுந்ததால் சாலை போடும் பணி அவசர கதியில் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.