தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி முக்கிய சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் வழக்கத்தை விடக் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் பொறுமையாகக் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு இதமான கால நிலையை ரசித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கண்டு ரசித்தனர். மேலும், மன்னவனூர் ஏரியில் பரிசல் சவாரியும், ஜிப் லைன் சவாரியும் செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
இதே போல நீலகிரி மாவட்டம், உதகையிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டதோடு இதமான கால நிலையை ரசித்தபடி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.