தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கலப்பு திருமண காரணமாக ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இளைஞரின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள நீராறுபட்டியைச் சேர்ந்தவர்கள் நாகரத்தினம் – கலா தம்பதி. இவர்களது மகன் ராஜசேகர் என்பவர், கடந்த ஆண்டு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் ராஜசேகரின் குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜசேகர் குடும்பத்துடன் ஆண்டிப்பட்டிக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் தற்போது நீராறுபட்டியில் மகமாயி கோயில் திருவிழா நடைபெற உள்ளது.
இத்திருவிழாவை வருடம்தோரும் ராஜசேகரின் தந்தையே தலைமை ஏற்று நடத்திவந்துள்ளார். ஆகையால், தங்களை மீண்டும் நீராறுபட்டியில் வசிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளனர்.