திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சந்தேக மரணமடைந்த கல்லூரி மாணவியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு ஆய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வருவாய் பகுதியைச் சேர்ந்த தண்டபாணியின் மகள் வித்யா கோவை அரசு கல்லூரியில் பயின்று வந்தார்.
இவர் திருப்பூர் விஜயா புரம் பகுதியைச் சேர்ந்த வெண்மணி என்பவரைக் காதலித்து வந்ததாகவும் இதற்கு வித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வித்யா மீது பீரோ விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் தண்டபாணி குடும்பத்தினர் வித்யா உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் வித்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார் பல்லடம் வட்டாட்சியர் தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் வித்யாவின் உடலைத் தோண்டி எடுத்து சுடுகாட்டிலேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து உடல் பாகங்களைச் சோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும் வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் சகோதரர் சரவணன் இருவரையும் விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.