சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கச்சத்தீவை மீட்கக்கோரி முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். பாஜக ஆரம்பத்திலிருந்தே கச்சத்தீவைத் தாரைவார்த்தது தவறு என்று தெரிவித்து வருவதாகக் கூறினார்.
கூட்டணி ஆட்சியிலிருந்தபோது தவற்றைச் சரிசெய்யாமல், ஆட்சியில் இல்லாதபோது பேசுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். கச்சத்தீவைப் பிரதமர் மோடி மீட்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகக் கூறிய வானதி சீனிவாசன், தமிழக அரசின் தனித்தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது எனவும் கூறினார்.
அப்போது, குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் துரைமுருகன், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். இதனால், கச்சத்தீவு விவகாரத்தில் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.