இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மீது பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை, ஏப்ரல் 2-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்படி இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 26 சதவீதமும், சீன இறக்குமதி பொருட்கள் மீது 34 சதவீதமும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும், பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்தியா, சீனா மட்டுமின்றி மற்ற பல நாடுகளுக்கும் பரஸ்பர வரியை டிரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி அதிகபட்சமாக கம்போடியா மீது 49 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீத வரியும், இலங்கை மீது 44 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேபோல, அமெரிக்காவில் தயாரிக்காமல் இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.