ஜாம்நகர் அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போர் விமானம் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த 2 விமானிகளில் ஒருவர் வீரமரணமடைந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். ஜாம்நகர் அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்த, போர் விமானம் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், படுகாயங்களுடன் காணப்பட்ட 2 விமானிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 விமானிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது.
மற்றொரு விமானி ஜாம்நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது. மேலும், வீரமரணமடைந்த விமானியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள விமானப்படை, விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.