சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் மீனம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதேப்போல், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வாலிகண்டபுரம், திருமாந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் டவுன், நரசிங்கபுரம் பைத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில், இன்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி, லத்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இலுப்பக்குடி, அரியக்குடி, மாத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்தது.
திருச்சி மாவட்டம் முசிறி, தா .பேட்டை, தும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. உழவு செய்ய சாரல் மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.