பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
சிவப்பு கம்பளம் விரித்தும், பூங்கொத்து கொடுத்தும் அதிகாரிகள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து பாரம்பரிய நடனமாடி இந்திய வம்சாவளியினர் அளித்த உற்சாக வரவேற்பை பிரதமர் மனமகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி ராமாயண சுவரோவியத்துடன் கூடிய தபால் தலையை தாய்லாந்து அரசு வெளியிட்டது. இந்தியா உடனான பிணைப்பை பறைசாற்றும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டதாக, தாய்லாந்து தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாங்காங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தாய்லாந்து பிரதமர் பேடாங்டம் ஷினவத்ரா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பரஸ்பர வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது பற்றி தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இந்திய மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் கூறினார்.