மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையைப் போலவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
விவாதத்தின் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துப் பேசினார். அப்போது, வக்பு வாரியத்திடம் ஏராளமான சொத்துகள் உள்ளன என்றும், ஆனால் இந்த சொத்துகளால் ஏழை முஸ்லிம்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், நாடாளுமன்ற கட்டடம் இருக்கும் இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று ஒருசாரார் கூறுகின்றனர் என்றும், இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவே வக்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்ததாக மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். இதற்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் மேஜையை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபிறகு புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.