சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, முதல் ஆளாக இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இக்கட்டான நேரத்தில் உதவியதற்காக இந்தியாவிற்கு மியான்மர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த மார்ச் 28 ம் தேதி, மியான்மரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக வரலாறு காணாத பெரும் பாதிப்பை மியான்மர் சந்தித்தது. இதுவரை 2 ஆயிரத்து 719 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 ஆயிரத்து 521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் அதில், பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மியான்மரில் நடந்த பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தேடல் மற்றும் மீட்பு (SAR), மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம் மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்க இந்தியா ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது.
இதுவரை, ஆறு விமானங்களும் ஐந்து இந்திய கடற்படைக் கப்பல்களும் 625 மெட்ரிக் டன் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 57 உறுப்பினர்களும், பாதிக்கப்பட்ட 13 பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
முதல் தவணையாக, C-130J விமானத்தின் மூலம், கூடாரங்கள், போர்வைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவு போன்ற 15 டன் பொருட்கள் உட்பட பேரிடர் நிவாரணப் பொருட்களின் முதல் பகுதியை இந்தியா மியான்மருக்கு வழங்கியுள்ளது. இது NDRF மற்றும் சுகாதார அமைச்சகத்தால் வழங்கப் பட்டுள்ளது.
அடுத்து, இரண்டு IAF C-130J விமானங்களில், 80 தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களுடன், 22 டன் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், தேடல் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், ஜென்செட்டுகள், சுகாதாரப் பொருட்கள், உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட பேரிடர் நிவாரணப் பொருட்கள் நேபிடாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.
மூன்றாவது தவணையாக, ஒரு விமானத்தில், 118 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய இராணுவ கள மருத்துவமனை குழு மியான்மருக்குச் சென்றது. கூடவே இன்னொரு விமானத்தில், 60 டன்களுக்கும் அதிகமான பொருட்கள், அவசர நேர அறுவை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லப் பட்டன. இத்துடன்,பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ மனைகளும் கொண்டு செல்லப் பட்டன.
நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மண்டலே பகுதியில் 200 படுக்கைகள் கொண்ட கள மருத்துவமனை அமைக்கப்பட்டு சேவை செய்து வருகிறது. கிழக்கு கடற்படை பிரிவைச் சேர்ந்த இந்தியக் கடற்படை கப்பல்களான சத்புரா மற்றும் சாவித்ரி ஆகிய இரண்டு கப்பல்களில், கொண்டு செல்லப் பட்ட 40 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டுள்ளன.
கூடுதலாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் பிரிவிலிருந்து கர்முக் மற்றும் LCU 52 ஆகிய இந்தியக் கடற்படைக் கப்பல்களில் அத்தியாவசிய உடைகள், குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் அவசரக்கால சேமிப்புக் கிடங்குகள் அடங்கிய 30 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கிளம்பிய இந்தியக் கடற்படைக் கப்பல் கரியல், யாங்கோனுக்குச் சென்றது. இந்தக் கப்பலில் 405 மெட்ரிக் டன் அரிசி, 30 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய், 5 மெட்ரிக் டன் பிஸ்கட் மற்றும் 2 மெட்ரிக் டன் உடனடி நூடுல்ஸ் உள்ளிட்ட 442 மெட்ரிக் டன் உணவுகள் கொண்டு செல்லப்பட்டன.
அண்டை நாடுகளில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளுக்கு விரைவாகவும் முழுமையாகவும் இந்தியா உதவும் என்பதற்கு ஆபரேஷன் பிரம்மா சான்றாக உள்ளது. அந்த வகையில், தங்களுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கிறது என்று மியான்மர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினரின், மீட்பு மற்றும் நிவாரண உதவிகளால் நிம்மதியையும் நம்பிக்கையையும் பெற்றதாக மியான்மர் மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.