உலக நாடுகள் மீதான ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. பணவீக்கம், வேலை இழப்புகள் மற்றும் மந்தநிலை என்று ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கையால் வரப் போகும் பாதிப்புக்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சஸ்பென்ஸ் முடிந்துவிட்டது. அமெரிக்காவை உலக நாடுகள் ஏமாற்றி விட்டனர் என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத அடிப்படை வரியையும், மோசமான குற்றவாளிகள் என்று தான் பட்டியலிட்ட 60 நாடுகளுக்குப் பரஸ்பர வரியையும் விதித்துள்ளார்.
இந்த வரிவிதிப்பால் அமெரிக்கா செழிப்படையுமா? என்றால், ட்ரம்ப் நினைத்தது போலவே, எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். பரஸ்பர வரி என்ற ஆபத்தான நடவடிக்கையால், பணவீக்கம், விலைவாசி உயர்வு,வேலையின்மை மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பொருளாதார வீழ்ச்சி உண்டாகும் என்றும் கூறியுள்ளனர்.
ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பால், இறக்குமதிக்கான செலவுகள் அதிகரிப்பதால், விலைவாசி அதிகரிக்கும். இதனால், முதலில் பாதிக்கப்படுவது அமெரிக்கர்கள் தான். இது ஒன்றும் புதிதல்ல ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்திலும் இப்படித் தான் நடந்தது. 2018ஆம் ஆண்டு, தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான உபகரணங்களைத் தடுக்க, வாஷிங் மெஷின் மீது ட்ரம்ப் இறக்குமதி வரி விதித்தார். இதன் விளைவாக, அமெரிக்காவில் வாஷிங் மெஷின்கள் விலை சராசரியாக 12 சதவீதம் உயர்ந்தது.
இப்படி, இறக்குமதி வரியால் ஏற்படும் விலைவாசி உயர்வு , பணவீக்கமாக மாறும். இதனால் அமெரிக்க மத்திய வங்கிக்கு நீண்ட காலத்துக்கான அதிக வட்டி விகிதங்களை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் டாலர் மதிப்பு உயரும், இது, அமெரிக்க ஏற்றுமதியையும் பாதிக்கும்.
கடந்த ஆண்டு, 3.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்தது. ஒரு வீட்டுக்கு 25,000 டாலருக்கும் அதிகமாகும். ட்ரம்பின் புதிய வரி விதிப்பால், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பல டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களின் விலைகள் எதிர்பாராத அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால், அமெரிக்காவில் ஒரு வீட்டுக்கு 7,300 டாலர் அதிகமாக வரி செலுத்த வேண்டியிருக்கும்.
பரஸ்பர வரிகளுடன் கூடிய முழு உலகளாவிய பதிலடி, உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் மந்த நிலையை உருவாக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்து, 60 பில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட எட்டு கார்களில் ஒன்று அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. பரஸ்பர வரிகள் காரணமாக அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறைந்தால், நிறுவனங்களின் லாபம் குறையும். அதன் காரணமாக, இங்கிலாந்து கார் உற்பத்தித் துறையில் பல்லாயிரக் கணக்கான வேலை வேலை இழப்புகள் ஏற்படும். இதனால், இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும்.
உலகளாவிய செமிகண்டக்டர் தொழில்துறைக்கு, ஆசியா நிலைக்களமாக உள்ளது. அமெரிக்க AI தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான சிப் உற்பத்தியில் சீனா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பில் சீனாவுக்குத் தான் அதிகமாக வரி விதிக்கப்பட்டுள்ளது. சீனா பதிலடி கொடுத்தால், உலகளாவிய ஐடிமற்றும் AI துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
ட்ரம்பின் வரி விதிப்புக்கு உலக நாடுகள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கினால், சர்வதேச அளவில் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படும். அதனால் உலகெங்கிலும் விலைவாசி கூடும். அந்தந்த நாடுகளில் பணவீக்கம் அதிகமாகும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.
அடுத்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு சதவீதம் அளவுக்குச் சுருங்கும் என்றும், அதனால், 2.5 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டுக்குள் உலகளாவிய மந்தநிலை ஏற்படும் அபாயம் 40 சதவீதம் இருப்பதாக உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான ஜே.பி.மோர்கன் எச்சரித்துள்ளது.
ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக உலகளாவிய மந்தநிலை ஏற்படும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரிக்கு வரி என்ற ட்ரம்பின் வர்த்தகக் கொள்கை, செழிப்பான அமெரிக்காவை உருவாக்காது என்றும், உலக பொருளதார சுழற்சியைச் சீர்குலைத்து விடும் என்றும் சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.