மலர்களின் மணம் கமழும் தோவாளை கிராமத்தின், மகுடம்போல் திகழும் மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கொடுத்துள்ளது மத்திய அரசு. சீன அதிபரே வியந்து பார்த்த சிறப்பு மாணிக்கமாலைக்கு உண்டு. அதுகுறித்து விவரிக்கிறது… இந்த செய்தி தொகுப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலர்களுக்குப் புகழ்பெற்றது தோவாளை கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோரின் தொழிலே மலர்மாலை கட்டுவதுதான். கேரளா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மலர்களும், மாலைகளும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மற்ற பகுதிகளிலும் மலர்மாலைகள் கட்டினாலும் தோவாளை கிராமத்திற்கென்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அதுதான் மாணிக்கமாலை. மாலையின் அமைப்பைப் பார்த்து மாணிக்கம்போல் உள்ளதாக திருவிதாங்கூர் மன்னர் கூறிய பிறகு மாணிக்கமாலை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அரளி, ரோஜாப்பூ, நொச்சி இலைகளைக் கொண்டு வரிசை வரிசையாக மலர்களைத் தொடுத்துப் பின்னல் வடிவில் மாணிக்கமாலை கட்டப்படும் கலையைப் பார்ப்பதே ஒரு கண்கொள்ளாக் காட்சிதான். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்திற்கு வருகை தந்திருந்தனர். அப்போது தோவாளையைச் சேர்ந்த வனிதா ஸ்ரீ, அவர்களின் முன்பு மாணிக்க மாலையைக் கட்டி அசத்தினார். அதன் சிறப்புகளைச் சீன அதிபருக்குப் பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் மூலவருக்கு அணிவிப்பதற்காக தோவாளையில் இருந்தே தினமும் மாணிக்கமாலை செல்கிறது. கோயில் விழாக்கள் மட்டுமின்றி திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் மாணிக்கமாலையை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வளவு சிறப்புப் பெற்ற மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கி மேலும் பெருமை சேர்த்துள்ளது மத்திய அரசு. மாணிக்கமாலைக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளதால் குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், பாரம்பரியமாக மாணிக்கமாலை கட்டி வரும் வனிதா ஸ்ரீயை கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜான் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேட்டியளித்த வனிதா ஸ்ரீ, குளிர்பதன அறைகள் மூலம் மலர்களைப் பதப்படுத்திப் பயன்படுத்தும் பயிற்சியை அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பேட்டியளித்த தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜான், மாணிக்கமாலை கட்டும் தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
செடியில் இருந்து பறிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வாடினாலும், அம்மலர்களால் தோவாளை மக்களின் வாழ்க்கை மணம் கமழ்கிறது. மாணிக்கமாலை கட்டுவது ஒரு கலை போன்றது. தற்போது அருகிவரும் இந்தக் கலையை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தோவாளை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.