ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
உலகின் முதல் சிவாலயம் எனப் போற்றப்படும் இக்கோயிலில், கடந்த பிப்ரவரி மாதம்16 ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.
5 கோபுரங்களை உடைய இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலய வளாகத்தில் 101 குண்டங்கள் எழுப்பப்பட்டு யாகசாலை பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசங்களில் ஊற்றினர். அப்போது யாகசாலையில் எழுந்தருளிய மரகத நடராஜ சுவாமியைப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே கும்பாபிஷேக விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், வெயிலின் தாக்கம் தாளாமல் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.