இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தியதற்காவும், இருநாட்டுக் கலாச்சார ஆன்மீகப் பாரம்பரியத்தை மேம்படுத்தியதற்காகவும், இலங்கையின் மிக உயரிய விருதான ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியப் பிரதமர் மோடி 2014ம் ஆண்டு முதல் இலங்கைக்கு 4வது முறையாகப் பயணம் மேற்கொண்டார். 2019ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
கடந்தாண்டு டிசம்பரில், திசாநாயக்க இந்தியாவுக்கு வந்த நேரத்தில் விடுத்த அழைப்பின் பேரில் இந்த இலங்கை பயணம் அமைந்துள்ளது.
கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு, இலங்கைக்குச் சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் இலங்கை பயணம், இரு நாடுகளின் நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை கடன் வாங்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஏற்கெனவே, இலங்கைக்கு சுமார் 1.36 பில்லியன் டாலர் கடன்களை இந்தியா கொடுத்துள்ளது. 2022ம் ஆண்டு,இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு, இந்தியா 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி உதவியைச் செய்தது. மேலும், இலங்கை திருப்பிச் செலுத்தத் தவறிய கடன்களை மறுசீரமைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்துப் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து எரிசக்தி, பாதுகாப்பு,வர்த்தகம், சுகாதாரம், மருத்துவம்,டிஜிட்டல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாட்டின் வணிக உறவை மேம்படுத்தும் என்று கூறப் பட்டுள்ளது.
இந்திய-இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இருதரப்பு இணை பயிற்சிகள், கூட்டு கடல் சார் கண்காணிப்பு ஆகியவை செயல்படுத்தப்படும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்திய- இலங்கை ராணுவ ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.
‘குறிப்பாக, இந்தியா – இலங்கை- ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையேயான திரிகோணமலை எரிசக்தி தொடர்பான ஒப்பந்தம் மிக முக்கிய ஒப்பந்தமாகக் கருதப் படுகிறது.
மேலும், இந்திய நிதியுதவியில் கட்டப்படும் இலங்கையின் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம், தம்புள்ளையில் குளிரூட்டப் பட்ட விவசாய களஞ்சியம், 5000 மதத் தலங்களுக்குச் சூரிய மின் கட்டமைப்பு வழங்கும் திட்டம் மற்றும் மாவோ- ஓமந்தை,மாவோ-அநுராத புரம் ஆகிய இரண்டு இரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
முன்னதாக,இலங்கையில் அரசு தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஸ்ரீலங்கா மித்ர விபூஷண விருது, அதிபர் அனுர குமார திசாநாயக்க பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.
விருதினை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, “செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நன்றி தெரிவித்தார்.
தீவிரவாத தாக்குதல், கோவிட் பாதிப்புக்கள் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட இக்கட்டான கால கட்டங்களில் இலங்கைக்கு இந்தியா உதவியிருக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.
முன்னதாக, கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்குப் பிரம்மாண்ட சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இது போன்ற வரவேற்பு அளிக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.