பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாகக் கைதான 9 பேரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கின் விசாரணையானது 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்துவரும் நிலையில், மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தலைமையில் விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சிறையில் உள்ள 9 பேரிடமும் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக, சேலத்திலிருந்து அவர்கள் அனைவரும் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்ற கட்டடத்தில் உள்ள தனி அறையில் வைத்து 9 பேரிடமும் அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்திய நிலையில், கோவை நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து பாலியல் வழக்கின் விசாரணையானது 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.