ஐபிஎல் தொடரில் 15 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கே அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணி வீரர் கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். சென்னை அணி தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ரன் குவிக்க முடியாமல் சென்னை அணி தடுமாறியது.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை வீரர் விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டெல்லி அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் விப்ராஜ் நிகாம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பின் சென்னை அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.