திருவள்ளூர் அருகே செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மகளுக்குத் தந்தை பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் தாமோதரன் என்பவர் முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். 2வது மனைவிக்குப் பிறந்த செவித்திறன் குறைபாடுடைய மகள் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், பாட்டி இறந்தவுடன் தாய் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைத்துள்ளார்.
இந்நிலையில், இரவு நேரங்களில் தந்தை தமக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வீடியோ கால்மூலம் மாற்றுத்திறனாளி பெண் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் தாமோதரன் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கடந்த 30ஆம் தேதி அளித்த புகாரின் மீது இதுவரை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், பெற்ற மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.