கும்பகோணம் அருகே சாலையோரம் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது அரசுப் பேருந்து மோதியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு இருமார்க்கமாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. கும்பகோணம் நான்கு ரோடு சந்திப்புக்கு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாகச் சாலையோரம் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால், அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், பயணிகள் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் அதிகாலை வரை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் மின் விநியோகம் நடைபெற்றது. இந்தச் சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.