மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கேரளா, நாட்டிலேயே முதல் மாநிலமாகப் புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வக்பு சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்குக் குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
இந்தச் சட்டத்திருத்தத்திற்கு அஜ்மீர் தர்கா ஷெரீப் அறக்கட்டளை தலைவர் ஹாஜி சல்மான் சிஷ்டி, கிறிஸ்துவ சமுதாயத்தினரை உள்ளடக்கிய பிஷப்புகளின் கூட்டமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாகப் புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்தக் கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் புதிய வக்பு வாரியத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.