சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குண்டம் திருவிழா கடந்த மார்ச் 25-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்றபடி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குண்டம் விழாவையொட்டி பண்ணாரி மாரியம்மன் கையில் வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில் பக்தர்கள் குண்டம் இறங்கிவிட்டு நேரடியாக பண்ணாரி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு அவ்வாறு வழிபடப் பக்தர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து விரட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.