முத்ரா யோஜானா திட்டம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதமர் மோடியால், பெரு நிறுவனங்கள் அல்லாத விவசாயம் சாராத, சிறு மற்றும் குறு தொழில்களை தொடங்க 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் வகையில் முத்ரா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் சிறிய வணிக நிறுவனங்கள், காய்கறி விற்பனையாளர்கள், நடைபாதை வணிகர்கள், படித்தவர்கள், மகளிர் தொழில் முனைவோர் எனப் பலரும் பயனடைந்தனர். இந்த நிலையில், முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்தத் திட்டம் மூலம் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து பயனாளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அப்போது, பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் சாமானிய மக்களுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகளவில் பெண்கள் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.