சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறு கின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 22-வது லீக் ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் சென்னை அணி மோசமான தொடக்கம் கண்டுள்ளது.
தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வென்ற சென்னை அணி, அதன் பிறகு நடந்த 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு சென்னை அணி திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மறுபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி, 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. உள்ளூரில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பும் ஆர்வத்தில் உள்ளது.
முன்னதாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
நேற்று முன்தினம் நடக்க இருந்த இந்த ஆட்டத்துக்கு ராமநவமி கொண்டாட்டம் காரணமாகப் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கொல்கத்தா போலீசார் கூறியதால், 2 நாள் தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெறுகிறது.