டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டிருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தெரிவித்தது.
அமலாக்கத்துறையின் இந்த சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது..
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் வழக்கிலிருந்து விலகினர்.
பின்னர் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு விசாரித்து அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இறுதி விசாரணைக்குத் தயார் எனக்கூறி விட்டு உச்சநீதிமன்றத்தில் ஏன் விசாரணையை மாற்றக் கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாகத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோதே உச்சநீதிமன்றம் செல்வதாகக் கூறியிருந்தால் பட்டியலிட்டிருக்க மாட்டோம் எனக் கூறிய நீதிபதிகள், இந்த மனு பொதுநலத்துக்காகத் தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதாவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டதா எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது தமிழக அரசு நேர்மையாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.