கன்னியாகுமரியைச் சேர்ந்த பல் மருத்துவர் உலகின் 6 கண்டங்களில் நடைபெற்ற சர்வதேச டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
உலக டிரையத்லான் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த 1987-ஆம் ஆண்டு முதல், ‘IRON MAN’ என்ற பெயரில் டிரையத்லான் போட்டிகளை உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது.
இதில் IRON MAN 140.6 மைல் பிரிவில் 3.9 கிலோ மீட்டர் நீச்சல், 180 கிலோ மீட்டர் சைக்கிளிங், 42.2 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவையும், IRON MAN 70.3 மைல் பிரிவில் 1.9 கிலோ மீட்டர் நீச்சல், 90 கிலோ மீட்டர் சைக்கிளிங், 21.1 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவையும் நடத்தப்படுகின்றன.
இந்த இரு பிரிவுகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவை அனைத்தையும் ஒரே நாளில் இடைவெளியின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
மிகக் கடினமான இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர்கடை பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் பிளமிங்சன் லாசரஸ் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் உலகின் 6 கண்டங்களில் நடந்த டிரையத்லான் போட்டிகளில் பங்கேற்ற ஒரே தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.