நாட்டின் வளர்ச்சியில் பெண் குழந்தைகளின் பங்கு அதிகம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பேசியவர்,
நம் நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? அப்துல் கலாம் அய்யாவின் கனவு என்ன? அதனை முன்னெடுத்து வைக்கும் வகையில் தான் நாம் முன்னேறி கொண்டு வருகிறோம். நம் நாட்டின் வளர்ச்சியில் பெண் குழந்தைகளின் பங்கு வேகமாக இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் நர்சிங் துறையில் இந்திய மாணவிகள் தான் அதிகம் உள்ளனர் என்று பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பிறகு இந்தியாவின் முகம் மாறி இருக்கின்றது என கூறினார்.
உக்ரைன் ரஷ்யா போரில் போர் முனையில் இருந்து 20,000 மருத்துவ மாணவிகளை இங்கே அழைத்து வந்திருக்கிறோம். நாம் என்ன சொல்கிறோமோ அதனை உலக நாடுகள் கேட்கிறது.
2047 ஆண்டு நம் 100 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளை ஆளப் போவதும், வழிநடத்தப் போவதும் இப்போதைய இளைஞர்கள் மத்தியில் தான் உள்ளது என அமைச்சர் கூறினார்.
இன்று அனைத்து பகுதிகளிலும் உலக நாடுகளுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை, சமூக கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
2047 இல் ஏழைகள் இல்லாத நாடாக, அனைத்தும் கிடைக்கின்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும். நம் மாணவிகள், சகோதிரிகள் உயரிய துறையில் வர வேண்டும் என்பதால் தேசிய ராணுவ அகாடமியில் பெண்களுக்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அதே போல பாராளுமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டில் பெண்கள் உள்ளனர், அதற்கான ஏற்பாட்டையும் பிரதமர் உருவாக்கி உள்ளார். எல்லா ஜனவரி 26-லும் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் பெண்களின் பங்களிப்பு கௌரவமாக இருக்கும். 2047 இல் நாடு வல்லரசு ஆவதற்கு உண்டான பாதையில் சந்திரயான் மிஷனில் இயக்குனராக பணியாற்றியது தென்காசியை சேர்ந்த பெண் தான்.
குறிப்பாக இந்தியா அடிப்படை கட்டமைப்புகளான விமானநிலையங்கள், மெட்ரோ, 8 வழி சாலை, எக்ஸ்பிரஸ் ஹைவே, புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில்கள் என உலக நாடுகள் அளவில் மேம்படுத்தி வருகிறோம். வந்தே பாரத் ரயில்கள் நமது உள்நாட்டு உற்பத்தி ஆகும், சுயசார்பின் அடிப்படையில் நம் சென்னையில் ஐசிஎஃப் இல் அவை தயாரிக்கப் படுகின்றது.
எப்போதும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்பதற்காக தான் பிரதமர் ஸ்டார்டப் நிறுவனங்களை கொண்டு வந்துள்ளார். சந்திரயான் திட்டத்திற்கு தேவையான பொருட்களை வழங்கியது ஒரு ஸ்டார்ட்டப் நிறுவனம் தான் என பேசிய அமைச்சர் எல் முரூகன், கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என பேசினார்.
நாம் நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்தை பின் தள்ளி, இன்று வளர்ந்த பொருளாதாரத்தில் 5 வது இடத்தில் உள்ளோம். 2047 இல் முதல் இடத்திற்கு நிட்சயம் நாம் முன்னேறுவோம். இன்று கிரியேட்டிவ் எகானமி உருவாக்குவதில் உலக அளவில் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்த கிரியேட்டிங் எகனாமியில் நம் மக்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.
ஹாலிவுட் படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் இங்கிருந்து செய்து கொடுக்கிறார்கள் என அவர் பேசினார்.
தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து பேசிய அமைச்சர், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தும் போது இதனை யார் பயன்படுத்துவர்கள் என கூறினர். ஆனால் சத்தியமங்கலம் காட்டிற்கு அருகே ஒரு பகுதியில் வெள்ளரிக்காய் விற்கும் பெண்மணி ஒருவரிடம் நான் கூகிள் பே மூலம் வெள்ளரிக்காய் வாங்கினேன். ஈரோட்டில் இருக்கும் காட்டிற்குள்ளேயும் கூட இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனை உதவுகிறது.
இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் நாம் உலக அளவில் 3 வது இடத்தில் உள்ளோம் என்பதே அதன் பெருமை ஆகும் என எல்.முருகன் பேசினார்.