காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
முதுபெரும் அரசியல் தலைவரான குமரி அனந்தன் சிறுநீரக பிரச்சனை காரணமாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் தனது 93-வது வயதில் காலமானார். 5 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒரு முறை எம்.பி-யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலக்கிய செல்வர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி கௌரவித்தது.
மறைந்த குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.