அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
ஜகஜால கில்லாடி பட தயாரிப்புக்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடனுக்காக அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால், ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி, நடிகர் பிரபு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் துஷ்யந்தின் தந்தை ராம்குமார் தரப்பு, அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என தெரிவித்ததால், அது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அன்னை இல்லத்தை தனது சகோதரர் பிரபுவுக்கு, தந்தை சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அந்த வீட்டின் மீது தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனக் கூறி, ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.