சிறந்த இலக்கியவாதியான குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதியாகவும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பொறுப்புகள் வகித்த அனந்தன் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசையின் தந்தையான குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் மொழியின் மீது மட்டற்ற பற்று கொண்டிருந்தமையால், தமிழக அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். இன்று அவர் மறைந்த இந்த துயரமான சமயத்தில், முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் , அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும்,ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.