நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மோகனூரை அடுத்துள்ள ஆண்டாபுரத்தில் செல்வம் என்பவர் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
அவர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி இளஞ்சியம், பேரக்குழந்தைகளான ஐவிழி மற்றும் சுஜித் ஆகியோரும் சென்றுள்ளனர்.
அப்போது, தோட்டத்தில் மின்கம்பத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியைத் தொட்ட மூதாட்டி இளஞ்சியம், பேரக்குழந்தைகள் ஐவிழி மற்றும் சுஜித் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் மின்கம்பத்தையொட்டி கம்பி வேலி அமைத்த விவசாய நிலத்தின் உரிமையாளர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளைக் கைது செய்யக் கோரி, நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.