நீட் விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டமே ஒரு நாடகம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
மீண்டும் மீண்டும் நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசியல் மோசடியில் ஈடுபடுவதாக கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப்பெரிய பொய் என்பதே திமுக தலைமையின் அறமற்ற அரசியல் என்று விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும், அதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாக மோசடி பிரசாரம் செய்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று சொல்லித் திமுக தப்பிப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள், தேர்தல் நெருங்குவதால் மீண்டும் நீட் போராட்டம் முடிந்து விடவில்லை என்று நீட்டி முழக்குவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களையும், பொதுமக்களையும் ஏமாற்றியதற்குத் திமுக தலைமை மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்தி உள்ளார்.