தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய நேரடி சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்கிஸ் ஆகியோர் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன் , காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது.
9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சாட்சிகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டதால் ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்த நிலையில்,தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் வழக்கில் முக்கிய நேரடி சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்ற ஆவணங்களை மனு தாரர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.