மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு போதிய நிவாரணம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சுமார் 65 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன.
இதற்குச் சொற்ப அளவிலேயே தமிழக அரசு இழப்பீடு வழங்கியதாகவும், வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூருக்கு முழுமையாக நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றினர். கைதான விவசாயிகளை வெளியே கொண்டு செல்லாதபடி வாகனங்களைச் சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினர் தங்களைத் தாக்கியதாகவும், ஆடைகளைக் கிழித்ததாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.