அமைச்சரவையில் கருத்துக் கேட்பதுதான் ஜனநாயகம் என்றும், ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் எனவும் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 87வது கம்பன் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கோவிலூர் மடாலய சுவாமிகள் நாராயண ஞான தேசிய சுவாமிகள், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கம்பனின் பெருமைகளை எடுத்துரைத்தனர்.
அப்போது பேசிய நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்,முடியாட்சி இருந்த காலத்தில் கூட ராமருக்குப் பட்டம் சூட்டுவது குறித்து அமைச்சரவையில் தசரதன் கருத்துக் கேட்டார் என்றும், அமைச்சரவையில் கருத்துக் கேட்பதுதான் ஜனநாயகம் என்றும் கூறினார்.
ஆனால் நம் நாட்டில் ஒரு காலத்தில் அமைச்சரவையே கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலையை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார் எனவும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழில் லட்சக்கணக்கான வார்த்தைகள் உள்ளது என்றும், கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாடல் என்ற வார்த்தை உலா வருகிறது எனவும் தெரிவித்தார்.
மாடல் என்பது ஆங்கில வார்த்தை எனக் குறிப்பிட்ட நீதிபதி, அதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை ஆட்சியாளர்கள் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியின் காவலன் எனக்கூறிக் கொண்டு நான்கரை ஆண்டுகளாக மாடல் என்ற சொல்லைக் கூசாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.
மேலும், தமிழ் தெய்வீக மொழி என்றும், எந்த மொழியாலும் தமிழ் அழியாது எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.