புதுக்கோட்டையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கூடத்தில் அதிகாலை முதலே மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி அப்பகுதி அரசு டாஸ்மாக் மதுபான கூடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது.
டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விலையைக் கூட்டி விற்பனை செய்ததாகவும், இதனைக் கண்டுகொள்ளாமல் காவல்துறையினர் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் ஆதரவுடன் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
மகாவீர் ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.