டெல்லியில் சிறப்பு நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவை 18-நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக நேற்று இந்தியா கொண்டு வரப்பட்டார். டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக ராணாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
தஹாவூர் ராணா நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி 18 நாள் விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதையடுத்து தஹாவூர் ராணாவிடம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த வழக்கில் என்.ஐ.ஏ., சார்பில் ஆஜராவதற்காக மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன், சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.