பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முருக கடவுளின் 4ம் படை வீடான சுவாமிமலை கோயிலில் பங்குனி உத்திர விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புகழ் பெற்ற இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.
இதே போல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேல்முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருகி முருகனை வழிபட்டனர்.
நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி செங்கோல் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆயிரங்கால் மண்டபத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு செங்கோல் சாற்றப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்ட பின் மண்டபத்தில் சிறப்பு உற்சவம் நடைபெற்றது.