புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை பகுதியில் உயிரிழந்த கோயில் காளையைக் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மாரி என்றழைக்கப்படும் கோயில் காளைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், மாரி காளை திடீரென உயிரிழந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு மற்றும் கோயில் திருவிழாவின்போது செய்யப்படும் மரியாதையுடன் உயிரிழந்த கோயில் காளைக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அப்போது, பெண்கள் கோலாட்டம் ஆடியபடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர், முத்துமாரியம்மன் கோவில் எதிரே உள்ள நிலத்தில் மாரி காளை நல்லடக்கம் செய்யப்பட்டது. கோயில் காளையின் இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.