ஆண்டிபட்டி கடமலைக்குண்டு பகுதிகளில் ஊராட்சி செயலாளர்களிடம் மர்மநபர் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் மொத்தம் 48 ஊராட்சிகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிவுற்றதால் அனைத்து ஊராட்சிகளும் செயலர்களின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், ஊராட்சி செயலாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், தாம் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ச்சி பணிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்த அவர், தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கூகுள் பே மூலம் 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் பணம் அனுப்பி வைத்த நிலையில், 30க்கும் மேற்பட்டோரிடம் மர்மநபர் பேசியதை அறிந்து ஊராட்சி செயலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மர்மநபர் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.